தேசியக் கொடியோடு பயணிக்க வேண்டியவள்...
இன்று தனிமையோடு போகிறாள்!!!!

அடிமைப்பட்டுக் கிடந்த
தமிழர் தேசத்தில்
அடுப்பூதும் பெண்கள் கையிலும்...
ஆயுதம் ஏநத வைத்த
தலைவன் வழியில்...
அடிமை விலங்கினை
உடைத்தெறியவென
பூக்களும்....
போர்களம் போனவர்களில்
நீயும் ஒருத்தி..!

வலி சுமந்த
வீர மங்கையான நீ....
போர்க்களத்தில்....
வரி சுமந்த
புலியாகிப் புயலானாய்.!!
அரசியல் சாணக்கியத்திலும்
தென்றலாய்... பூவாய்...
உலா வந்தாய்..!!

இன்றோ...
நீ இறந்தநாள் என...
அனைத்துத் தமிழரும்
தமிழர் ஊடகங்களும்
கண்ணீர் அஞ்சலியோடு
அழுது தீர்க்கின்றனர்..!!!

ஆனாலும்.....
உனது சரித்திரம் அப்படியல்ல...

தலைவன் நிழலில்...
தலைவனின் பார்வையில்...
தளபதிகள் போராளிகளோடு
மக்கள் கடலில் சங்கமித்து
வானலைகளில்
விடுதலைக் கீதங்கள்
இசைக்கப்பட்டு...
தேசமெங்கும்
மஞ்சள் சிகப்புக் கொடிகள்
அலங்கரிக்க...
தோரணங்கள் தொங்க விடப்பட்ட
வீதிகளில் - தமிழீழ
தேசியக் கொடி போர்த்தப்பட்ட
உன் புனித
வித்துடல் பயணிக்க...

தெருவெல்லாம் காத்திருக்கும்
குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை
தம் உறவொன்று
வீரமரணம் எய்தியதாக...
உன் புனித வித்துடலை
கண்ணீரோடு
மலர் மாலைகள் சாத்தி
வணங்கிக் கொள்ள...

தமிழீழ தாகத்தினைத் தாங்கி
தமிழர்களின்...
நினைவுகளைச் சுமந்து
"புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம்" என
துயிலும் இல்லத்தில்
இராணுவ மரியாதையோடு
வீரச்சாவாய்....
விதைக்கப்பட்டிருக்க வேண்டிய
உன் புனித வித்துடல்,

இன்றோ....
சாதாரண சாவாய்...
எதுவமற்று
வெறும் சடங்குகளோடு
தீயினில் சங்கமித்து
வெறும் சாம்பலாகிப் போனதே.!!!

வீர வரலாறாக...
வீர வணக்கத்தோடு...
உயர் பதவி நிலையோடு...
கல்வெட்டுகளிலும்
சரித்திரப் பக்கங்களிலும்
பதிக்க வேண்டிய உன்னை...

இன்றோ....
சூனியத்தில் இருந்து
சாபங்களை வேண்டி
வெறும் கண்ணீர்
அஞ்சலிகளோடு
கோழைகளாக.....
கையாலாகாத நிலையில்
வெட்கித்து நின்று - வெறும்
அஞ்சலி மட்டுமே செய்து
கண்ணீரோடு கதறுகின்றோம்.!!!

வீரச்சாவாய்...
வீர வரலாறுகளுடன்
விதைக்கப்பட வேண்டிய
உன் புனித வித்துடல்...

இன்று...

தீயினில் சங்கமாகி
சாம்பலாகிப் போனாலும்...
தமிழர்களாகிய நாம்
நெஞ்சமெல்லாம் சுமந்து
உனக்கான கல்லறை அமைத்து
வீர வரலாறுகளாய்....
உன் வரலாற்றுப் பக்கங்களையும்
உன் நினைவுகளையும்
எழுதி... எழுதியே...
வீரவணக்கம் செலுத்துவோம்!!!!

- வல்வை அகலினியன்.
சில கேவலமான பிறவிகளால்... விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், விடுதலைப் புலிகளின் புனித சின்னத்திற்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது!!!


தற்போது, கேள்வி கேட்க யாருமே இல்லை என்றவுடன் பல ஈனப்பிறவிகள் சமூக வலைத்தளங்களில் தாம்தான் "விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம்" என்ற ரீதியில் அறிக்கைகள் விட்டு விடுதலைப் புலிகள் அமைப்பையும், விடுதலைப் புலிகள் சின்னத்தையும் கேவலப்படுத்தி வருகிறார்கள்.

சரி, அறிக்கைகள் விடுவது என்றாலும் நல்ல விடயங்களோடு கருத்துக்கள் பதிவு செய்து வெளியிடுவதென்பது சிறப்பே... ஆனாலும், உணர்வுள்ள உண்மைத் தமிழர்கள் எவரும் விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி போலி அறிக்கைகள் வெளியிட்டு மக்களைக் குழப்புவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அவ்வாறான போலி அறிக்கைகள் வெளியிடுபவர்களை "துரோகத்தின் எச்சங்களாகவே" தமிழர்கள் கருதுவார்கள்.

இங்கே நான் கீழே இணைத்திருக்கும் படத்தை அமல் என்பவரின் முகநூலில் இருந்து எடுத்தேன். அதில் விடுதலைப் புலிகளின் பெயரையும், சின்னத்தையும் சட்ட விரோதமாகப் பயன்படுத்தியது மட்டுமின்றி தமிழையும் கொலை செய்துள்ளனர்.


அதில் "சிறுமிகளையும்" என்பதற்கு "சிருமிகளையும்" என்றும்...

பலாத்காரம் என்பதற்கு "பலச்காரம்" என்றும்... தமிழ் மொழியை கொலை செய்துள்ளனர். போதாத குறைக்கு விடுதலைப்புலிகளின் பெயர் வேறு..!!

தமிழரின் வீரம் செறிந்த வரலாறுகளையும், விழுமியங்களையும், பெருமைகளையும் உலகறியச் செய்த விடுதலைப் புலிகளின் பெயரில் அநாகரீகமான நடைமுறையில் எழுத்துத் தவறுகளோடு இவ்வாறு அறிக்கைகள் வெளியிடுவதால்... அது உலகில் ஒட்டுமொத்தத் தமிழர்களையும் தலைகுனிய வைத்து கேவலப்படுத்தும் செயலாகும்!!

இவ்வாறான அறிவற்றத்தனமான அறிக்கைகள் விடுபவர்களை இனம் கண்டு அனைவரும் புறக்கணிக்க வேண்டும்... காரணம், இவர்களால் தமிழனத்திற்கே மிகப் பெரிய ஆபத்து உருவாகும் சூழல் உள்ளது!

தற்போது... முகநூல்களில் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால், உடனே அவருக்கு "துரோகிப்" பட்டம் கொடுத்து இவ்வாறான அறிக்கைகள் ஊடாக பதிவிட்டு விமர்சிப்பார்கள்.  போதாத குறைக்கு அவரது பதிவின் உண்மை நிலையை ஆராயாமல், ஆழமாக சிந்திக்காமலும், தூரநோக்கின்றியும் துரோகிப் பட்டம் கொடுக்கப்பட்டவருக்கு கேவலமான முறையில் பின்னூட்டம் பதிவு செய்வதற்கு ஒரு முட்டாள் கூட்டமும் கூடவே அலையும்.!!

தற்போது ஒரு கணணி... ஒரு கைபேசி... ஒரு முகநூல் கணக்கு இருந்தால் போதும் உடனே ஒருவருக்கு "துரோகிப் பட்டம்" கொடுக்க முடியும்!!

உண்மையிலேயே ஒருவர் துரோகம் செய்தால், அவர் செய்த துரோகத்தின் செயற்பாடுகளை ஆதாரபூர்வமாக வெளியிட்டு செய்திகளாக பதிவிட வேண்டும். அதுவும் நாட்டின் நலன்களுக்கு எதிராக செயற்படுபவர்களையே அனைவரும் பொதுவில் "தேசத் துரோகி" என்பார்கள். அதுவும், அவ்வாறானவர்களை ஒரு அரசாங்கம் அல்லது மக்களினால் அங்கிகரிக்கப்பட்ட அமைப்புக்கள் போன்றவைகள்தான் ஆதாரங்களுடன் துரோகத்தின் செயற்பாடுகளை உத்தியோகபூர்வமாக வெளியிடுவார்கள்.

ஆனால், தற்போதோ இந்த முகநூல்களில் ஒருவரை ஒருவருக்கு தனிப்பட்ட ரீதியாக பிடிக்கவில்லை என்றால் உடனே அவர்கள் கொடுக்கும் பட்டம், "துரோகிப் பட்டமே"!!! அதன் உண்மை நிலையை ஆழமான முறையில் ஆராயாமல் அதற்கு பின்னூட்டம் பதிவிடும் சிலர் மூடர்கள் கூட்டமும் ஒருபக்கம்!!

இவ்வாறு இந்த முகநூல்களில் உலாவி வரும் சில கேவலமான ஈனப்பிறவிகளால் உண்மையான தமிழ் உணர்வாளர்கள் பாதிப்படைவதோடு அந்த உணர்வாளர்கள் முன்னெடுத்துச் செல்லும் ஆரோக்கியமான நல்ல விடயங்களும் தடைபட்டுப் போகிறது. அவ்வாறு தடைப்படுவதால் தமிழினத்திற்கே தாழ்வும், அழிவு நிலையும் ஏற்படும் அபாயம் உள்ளதை இந்த முகநூல் போலிகள் ஒருபோதும் அறிவதில்லை!!!

உலகில் முகநூல் பயன்படுத்தும் பல மொழி மக்களில் தமிழன் மட்டுமே அடுத்தவர்களுக்கு முகநூல்களில் "துரோகிப் பட்டம்" கொடுத்து சண்டையிட்டு  உலாவி கேவலப்பட்டு வருகிறான்!!!

இவ்வாறான செயல்களை நிறுத்தாத வரையும் தமிழனுக்குத் தாழ்வு நிலையே!!!

- வல்வை அகலினியன்
              (11.10.2015)

‘சார்’ என்ற வெள்ளைக்காரன் வார்த்தையில் மூழ்கி மகிழ்ந்து கொள்ளும் தமிழ் உணர்வாளர்கள்!!

தமிழகத்தில் பல தமிழ் உணர்வாளர்கள்....

ஆங்கிலம் கலப்பின்றி தமிழ்மொழி மட்டுமே பேச வேண்டுமென முழு மூச்சோடு செயற்படுபவர்களைப் பார்க்கும்போது பெருமகிழ்வடைகின்ற போதிலும்....

அவர்களை, மற்றவர்கள் வெள்ளைக்காரன் மொழியில் "சார்" என்று பெருமிதத்தோடு அழைப்பதை... ஏன் மறுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை யாருமே ஒருபோதும் சிந்திப்பதில்லை!!??

ஒருவரை ஒருவர் அழைக்கின்ற ஆரம்பத்திலேயே, தமிழனை சாகடித்து "சார்" என்ற வெள்ளைக்காரன் வாய்வழியூடாக புகுந்து விடுகிறான்.!!!

பிறகெப்படி தமிழ் வாழும்??? நம் தமிழ் மீளூம்???

இதை ஏன் யாரும் உணர்ந்து கொள்வதில்லை..???

அவ்வாறெனில், மற்றவர்களை எவ்வாறு அழைப்பதென்று யாருமே கவலை கொள்ள வேண்டாம்.

இதோ.....

ஆண்களை "சார்" என்று அழைப்பவர்கள்...

வயதிற்கு மூத்தவர்களை "ஐயா" அல்லது "அண்ணா" என்றும்...

வயதிற்கு இளையவர்களை "தம்பி" என்றும்...

பெண்களை "மேடம்" என்று அழைப்பவர்கள்...

வயதிற்கு மூத்தவர்களை "அம்மா" அல்லது "அக்கா" என்றும்....

வயதிற்கு இளையவர்களை "தங்கை அல்லது "தங்கச்சி" என்றும்...

இருபாலரிலும் மிகவும் மதிப்பிற்குரியவர்களை "பெரியவர்" என்றும்... அழைத்துப் பாருங்கள்..!

நம் தமிழ் உறவு வார்த்தைகள் அனைவரையும் உரிமையோடு அழைத்து உறவு கொண்டாடும்.! ஒருவித உணர்வுகள் சங்கமிக்க உணர்ச்சிகள் மேலோங்கும்!!!

"சார்", "மேடம்" என்று அழைப்பதால் எந்த உரிமையும் அழைக்கப்படுபவர்கள் மேல் நமக்கு வந்து விடப்போவதில்லை!!!

மாறாக... அழைப்பவரை உயர்த்தி, அழைக்கும் நாம் தாழ்ந்தே போகிறோம்!!!

ஆகவே, இனிமேலாவது தமிழ் மொழியில் நம்மவர்களை அழைத்து, அனைவரோடும் உரிமையோடு உறவு கொண்டாடுவோம்..!

நம் தமிழையும் நாம் வளர்ப்போம்!

- வல்வை அகலினியன்.
             (15.10.2015)



இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, தமிழன்
செஞ்சோலை....

போர் நடந்து கொண்டிருந்த இறுக்கமான நிலையில் யாழ்ப்பாணத்தில் 91 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட போதும்....

ஒவ்வொரு இடப்பெயர்வு மத்தியிலும் தேசியத் தலைவர் அவர்களால் பெருவிருட்சமாகவே கட்டிக் பாதுகாக்கப்பட்டது செஞ்சோலை இல்லம்.

முதலில் யாழ்ப்பாணத்தில் சில இடங்களிலும்...

95 ஆண்டு இடப்பெயர்வுக்குப் பின் தற்காலிகமாக கிளிநொச்சி மாவட்டம் கனாகாம்பிகை குளம் (திருவையாறை அண்டிய பிரதேசம்) என்ற இடத்திலும்....

கிளிநொச்சி நகரம், இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பின் வடகாடு மல்லாவியிலும்....

பின்பு வள்ளிபுனத்திலும்.... பின்பு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இரணப்பாலையிலும் இறுதியில் கைவேலியிலும்,  "செஞ்சோலை இல்லம்" ஆனாதரவான ஈழக் குழந்தைகளுக்கு தாயாகவே இருந்து வந்துள்ளது.


தேசியத் தலைவர் அவர்களின் துணைவியாரோடு யாழ் பல்கலைகழகத்தில் கல்வி கற்று,  அவருடனேயே தமிழகம் வந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட மூத்த பெண் உறுப்பினரான செல்வி ஜனனி அக்கா அவர்களே.... செஞ்சோலை இல்லத்தின் தாயாக இறுதி வரை இருந்தார்.

ஜனனி அக்கா அவர்களை செஞ்சோலை குழந்தைகள் அனைவரும் "பெரியம்மா" என்றே அன்போடு அழைத்து வந்தார்கள்.

தேசியத் தலைவர் அவர்களையும் "தலைவர் மாமா" என்றே அழைக்கும் செஞ்சோலைக் குழந்தைகள், தேசியத் தலைவர் அவர்களின் துணைவியாரை "மாமி" என்றே உரிமையோடு இறுதிவரை அழைத்து வந்தனர்.

செஞ்சோலை குழந்தைகளுக்கு தாயான ஜனனி அக்கா அவர்களும் இறுதிவரை திருமணம் செய்யாமலே செஞ்சோலை குழந்தைகளுடனேயே பெரும் தாயாக வாழ்ந்து வந்தார்.

இவ்வாறு செஞ்சோலை நினைவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்....

பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் செஞ்சோலை உருவாக்கப்பட்ட வரலாறை முழுமையாக பதிவு செய்கிறேன், அதுவரை காத்திருக்கவும்.

- வல்வை அகலினியன்.
              (03.10.2015)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, www.asrilanka.com