இந்திய இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய வல்வையர்களின் புகைக்குண்டும்... அதன் சிறு வரலாறும்.!!

இந்திய இராணுவத்தையே அச்சத்திற்குள்ளாக்கிய வல்வையர்களின் புகைக்குண்டும்... அதன் சிறு வரலாறும்.!!


வல்வெட்டித்துறையில் நெடியகாடு இளைஞர்களால் காலம்காலமாக கோவில் திருவிழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளிலும்... பல ஊர்களில் பல வகையான நிகழ்வுகளிலும் பல வகையான அளவுகளில் உருவாக்கி நெருப்பின் மூலம் வருகின்ற புகையின் சூடான காற்றினை நிரப்பி வானில் பறக்க விடுகின்ற காகிதத்தில் உருவான ஒரு பெரிய Baloon புகைக்குண்டு அல்லது புகைக்கூடு என்று அழைக்கப்படும்.
விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நாள் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக வன்னியில் பல இடங்களிலும் நெடியகாட்டு இளைஞர்களின் புகைக்குண்டுகளானது, அடிவானம் தொட்டு மாவீரர்களுக்காக அஞ்சலிகள் செலுத்திய பல வரலாறுகளும் உண்டு.
இந்தியா இராணுவம் வல்வெட்டித்துறையில் இருந்த காலப்பகுதியில் மேற்குறிப்பிட்ட புகைக்குண்டுகளானது வானத்தில் பறப்பதைக் கண்டு... "விடுதலைப் புலிகள் உள்ளுக்குள் இருந்து தாக்க வருகிறார்கள்" என நினைத்து பயந்து போய் உலங்கு வானூர்திகள் மூலம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் புகைக்குண்டுகளைச் சுற்றி வளைத்து சுட்டுத் தள்ளிய வரலாறுகளும் பல உண்டு. இவ்வாறு பல வியப்பூட்டும் வரலாறுகளைக் கொண்ட புகைக்குண்டினைப் பற்றிப் பார்ப்போம்...
பலரையும் வியப்புக்குள்ளாக்கியும்... அறியாத ஒரு சிலரை அச்சத்திற்குள்ளாக்கியும் வரும் இப்புகைக் குண்டுகளானது, பட்டம் (காத்தாடி) உருவாக்கப் பயன்படுத்துகின்ற ஒரு சாதாரண காகிதத்தாலேயே உருவாக்கப்படுகிறது. இரட்சாத புகைக்குண்டுகள் மட்டுமே பைஞ்சுதை காகிதத்தால் (Cement packed Peper) உருவாக்கப்படுகிறது.
காங்கேசன்துறையில் Cement பொதி செய்யப்படும் பைகளானவை ஒரு வகையான தடிப்பான காகிதத்தாலானவை. அந்தக் காகிதத்தை வல்வையர்கள் "மாட்டுத்தாள் பேப்பர்" என்றே அழைப்பார்கள். அந்த மாட்டுத்தாள் பேப்பரைத்தான் 40 அடிக்கு மேலான புகைக்குண்டுகளை உருவாக்கப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்ததின நிகழ்வையொட்டி 50 அடி நீளமுள்ள இரட்சாத புகைக்குண்டினை வானத்தில் பறக்க விட்டு வல்வை மக்களின் வாழ்த்துக்களை விசேடமாக தெரிவித்து சிறப்பித்திருந்தனர், வல்வை நெடியகாட்டு இளைஞர்கள்.
இப் புகைக்குண்டுகளை பறக்க விடுவதற்காக... பாதி இரும்பு பரல்கள் அல்லது பெரிய வாளிகளில், ஏற்கனவே சேமித்து வைத்திருந்த வாகனங்களின் கழிவு எண்ணெய்களை ஊற்றி அதற்குள் பழைய துணிகளை ஊற வைத்து தீப்பந்தமாக எரியவிடுவார்கள்.
புகைக்குண்டின் நீளங்களுக்கு ஏற்ப வகையில் புகைக்குண்டின் நுழைவாயிலில் வட்டவடிவமாக பொருத்தப்படும் கம்பியின் அளவும் மாறுபடும். அந்த இரும்புக் கம்பி பொருத்தப்பட்ட வாயிலாலேயே தீச்சுவாலையில் இருந்து வெளிவரும் புகையின் காற்று உட்செலுத்தப்படும். ஏற்கனவே வாளிகளில் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலையின் மேல் புகைக்குண்டின் நுழைவாயிலை பலர் பாதுகாப்பாக பிடித்தபடி புகையிலிருந்து வரும் சூடான காற்றினை நிரப்புவார்கள். (படம் பார்க்க)
காற்று நிரம்பியதும் தொடர்ந்தும் பல கிலோ மீட்டர் தூரத்திற்குப் பறப்பதற்காக நுழைவாயிலில் உள்ள வட்ட வடிவ இரும்புக் கம்பியோடு இணைத்து புகைக்குண்டின் நுழைவாயிலில் குறுக்கு வழியாக நடுவினில் பெரிய தீப்பந்தம் ஒன்றை பல மணிநேரம் நின்று எரியக்கூடிய வகையில் வாயிலில் இணைத்து விடுவார்கள். கீழ்ப்பக்க நுழைவாயிலில் எரியும் தீப்பந்தம் மூலம் உள்ளிருக்கும் காற்று சூடாக்கபட்டு ஏற்கனவே முழுவதுமாக நிரம்பிய சூடான காற்றுடன் புகைக்குண்டு மெல்ல மெல்ல மேலெழும். பின்பு மெதுவாக அனைவரும் எழுந்து சிறு சுற்றுச் சுற்றி அப்படியே பறக்க விடுவார்கள்.
புகைக்குண்டானது பறந்து செல்லும் காட்சியை அருகிலிருந்து பார்க்கும் போது ஒரு வித்தியாசமான அனுபவத்தையும், ஒரு முழுமை பெற்ற மகிழ்ச்சியையும் மனதார பலரால் உணர முடியும். பல கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்ற புகைக்குண்டின் கீழ்ப்பக்க நுழைவாயிலில் பொருத்தப்பட்ட தீப்பந்தமானது அணைந்தவுடன் மெது மெதுவாக கடலிலோ அல்லது கண்தெரியாத இடத்திலோ விழுந்து விடும்.
இப் புகைக்குண்டுகள் சரியான அளவுத்திட்டத்துடனேயே உருவாக்கப்படுகிறது. அனைத்துமே அனுபவசாலிகளின் கைக்கணக்கு, கண்கணக்கினூடாகவே துல்லியமான முறைகளில் உருவாக்குகிறார்கள். சிறிய அளவு பிசகினாலும் புகைக்குண்டைப் பறக்க வைக்க முடியாது.!!
புகைக்குண்டு விடுவதையும், வானில் பறப்பதையும் காணவென்றே பல சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல இடங்களிலிருந்து வருவார்கள். பல பல வண்ணங்களில் புகைக்குண்டுகள் பறக்க விடுவதால் பல குழந்தைகளின் மனம் கவர்ந்த மிகப் பெரிய Baloon என்றும் சொல்லலாம்.
இலங்கையிலே வல்வெட்டித்துறையில் மட்டுமே புகைக்குண்டுகள் உருவாக்கி பறக்க விடப்படுகிறது.
புகைக்குண்டு... வல்வையர்களின் பெருமைமிக்க சிறப்புக்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
         (26.07.2015)
இந்தப் பதிவின் இணைய வடிவம்:

0 comments:

Post a Comment