“களம்”….. விருதுகள் வாங்கிய ஈழக் குறும்படம்
நிஜ வீரத்தையும், நிஜ மரணத்தையும் நிஜ உணர்வுகளோடு கண் முன்னே நிறுத்துகின்ற ஓர் உன்னதக் குறுங்காவியம்!
ஈழ இளைஞர்கள் வீரப் போர்களில் தாம் சளைத்தவர்களல்ல என்பதை உலகிற்கு காட்டி நிற்கின்ற அதே வேளையில், அந்த யுத்த சூழ்நிலையில் கல்வியையும், கலைகளையும் கற்றுக் கொள்ள முடியாத ஒரு இறுக்கமான நிலையில் இரத்தங்களிலும், மரணங்களிலும், சிதைந்து போன சதைகளிலிருந்தும் புதிதாய் பிறந்து வந்து திரைத்துறையிலும் தாம் சளைத்தவர்களல்ல என்பதை இக்குறுங்காவியம் ஊடாக நிரூபித்துள்ளார்கள்.
பல சகாப்தங்களாக பல பரிமாணங்களைக் கண்ட தென்னிந்திய தமிழ்த்திரைப்படங்களோடு ஒப்பிடும் போது நிஜ துப்பாக்கிச் சண்டைகளோடு, நிஜ மரணவலியையும் உண்மைத் தன்மைகள் மாறாது மனதோடு பதித்து பார்ப்பவர்களையும் அந்த யுத்த களத்திற்கே அவர்களேயே அறியாமல் இழுத்துச் செல்கின்ற உயிர்வலி நிறைந்த உன்னத படமாக உயர்ந்தே நிற்கிறது.
வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் குடும்பத்தையே பறி கொடுத்த இரு சகோதர போராளிகள் (அக்கா, தம்பி) பிறிதொரு யுத்த களமுனையில் மரண விளிம்பிலிருந்து உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கின்ற உயிர்வலிகளை பதிவு செய்திருப்பது, ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அப்படியே கண்முன்னே நிறுத்துகின்றது.
தமிழ் திரைப்படக் காட்சிகளில் இரத்தக்காயங்களும், துப்பாக்கிச் சண்டைகளும் நம்பும்படியாக இல்லாமல் செயற்கைத்தனமாக இருக்கும். ஆனால், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் மிஞ்சிய (அரண் படம் தவிர) ஒரு சிறிய படைப்பு இது! பதினைந்து நிமிட படைப்புக்களிலேயே களநிலைகளற்ற அழகிய பிரான்ஸ் தேசத்தையே காட்சிப் பதிவுகளால் ஈழ யுத்தகள தேசமாக மாற்றி இரத்தக் காயங்களையும், உயிர் பிரிகின்ற மரணவலிகளையும் நேரில் பார்ப்பது போல காட்சிப் பதிவுகளை உருவாக்கி, எம்மாலும் உலக தரத்திற்கு நிகராக படங்கள் எடுக்க முடியும் என்பதனை அதிரடியாக நிரூபித்துள்ளார்கள்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள் என்னவெனில்… யுத்தங்களுக்குள்ளும், இரத்தங்களுக்கும், வலிகளுக்குள்ளும், வறுமைகளுக்குள்ளும் மூழ்கிப் போய் வீடுவாசல்கள் இழந்து. ஊர் இழந்து, நாடு இழந்து அகதிகளாக ஓடியோடி நிரந்தர முகவரி இல்லாமல் வாழ்ந்தவர்கள்… தங்களுக்கு சம்மந்தமே இல்லாத மாறுபட்ட ஒரு துறையில் கால் பதித்து அதிலும் சாதித்து விருதுகள் வாங்கியிருப்பது என்பது அசாதாரணமானது!
வெறும் வார்த்தைகளால் இந்தப்படத்தினை விமர்சிக்க முடியாது! இதை உருவாக்கியவர்களின் பயணித்து கடந்து வந்த பாதையினை திரும்பிப் பார்த்தால் இரத்தம் தோய்ந்த கண்ணீர்க் கதைகளே வலிகளுடன் அதிகமாக இருக்கும். ஆகையினால்தான், இதை உருவாக்கியவர்களின் களச்சூழல்களை வைத்து தென்னிந்திய தமிழ்த் திரைப்படங்களோடு ஒப்பிடுகின்றேன். இதனால், தென்னிந்திய திரைப்படக்கலைஞர்களையும், அவர்களின் படங்களையும் நான் அவமதிப்பதாக கருத வேண்டாம். இந்தப்படத்தினை உருவாக்கிய ஈழத்துக் கலைஞர்களும், தென்னிந்திய கலைஞர்களும் பயணித்த பாதைகள் வெவ்வேறானவை! ஆகவே, இந்த “களம்” குறும்படத்தை உருவாக்கிய ஈழத்துக் கலைஞர்கள் பயணித்த பாதையினை நினைவில் நிறுத்தித்தான் இக்குறுங்காவியத்தை நான் விமர்சிக்கின்றேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த உன்னதப் படைப்பை ஈழம் சார்ந்து வந்த எல்லாப் படங்கள் போலவும் கருத முடியவில்லை! வலிகள் சுமந்த ஈழப்படங்கள் நிஜ துப்பாக்கிச் சண்டைகளோடு நிறையப் படங்கள் வந்திருந்தாலும்… களச்சூழலுக்கு மாறுபட்ட தேசத்திலிருந்து தொழில் நுட்ப ரீதியாகவும், கலை வடிவமைப்புக்கள் ரீதியாகவும் இந்தக் குறுங்காவியமே முன்னிலை வகிக்கின்றது!
இந்தப் படத்தினை உயிர்வலிகளுடன் செதுக்கிய திரு.ரமணன் அவர்களையும், ஒளி ஓவியம் ஒப்பனையுடன் படத்தொகுப்பினை கச்சிதமாக காட்சிக்குப் பொருந்தும் படி உயிராக்கிய திரு. விஜிதன் சொக்கா அவர்களையும், ஆங்கிலப்படங்களுக்கு நிகராக இசைக் கோப்பு செய்த திரு. ஜனார்த்திக் சின்னராசா அவர்களையும் பாரட்டுவதோடு நில்லாமல்… காலங்காலமாக எம் உறவுகள் ஈழத்திலே அனுபவித்த சொல்ல முடியாத பல வலிகளை உயிருள்ள காட்சிகளாக்கி, புதிய புதிய படைப்புக்கள் மூலம் உயிராக்கி, உருவாக்கி மனச்சாட்சிகளற்ற உலகின் பார்வைக்கு கொண்டு வர வேண்டுமென உலகத்தமிழர்கள் சார்பாக அன்போடு வேண்டி நிற்கின்றேன்.
“களம்” – ஈழப்போராட்டக் களத்தினையும், இக்காவியத்தை உருவாக்கியவர்களின் களத்தினையும் கண்முன்னே நிறுத்துகின்ற ஒரு உன்னத உண்மைப் பொக்கிஷம்!
- வல்வை அகலினியன்(02.12.2013)
இந்தப் பதிவின் இணைய வடிவம்:


0 comments:
Post a Comment