தமிழர்களின் கோவணத்தில் அன்னிய தேசத்தவர்களுக்கு மேலாடைகள்..!

”இலங்கையில் புகலிடம் கோரும் ஆப்கான் மற்றும் பாகிஸ்தானியர்கள்”!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பலர் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தில் அகதிகளாக பதிவுசெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறு பதிவு பெறுபவர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக குடிவரவு குடியகல்வு பணிப்பாளர் சூலாநந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
அகதிகளாக பதிவுப்பெறும் இந்த வெளிநாட்டவர்கள் குறித்த நாடுகளில் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களா? என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
அகதிகளாக வரும் பாகிஸ்தானியர்கள் பலர் குடும்பங்களாக வருவதாகவும் அவர்கள் போதியளவு பணத்துடனேயே வருவதாகவும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.”” செய்தி  


மிகச்சிறிய நாடாக இருந்து கொண்டு, தன் சொந்த நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் சொந்த நாட்டு மக்களை இருபது இலட்சத்திற்கு மேல் அகதிகளாக வைத்துக் கொண்டு… அன்னிய தேசத்தவர்களுக்கு தனது நாட்டில் குடியுரிமை கொடுக்க முன் வந்துள்ளதாம் இலங்கை அரசு!
வெளிநாடுகளில் வாழ்கின்றவர்கள் ஒரு புறமிருக்க, இன்னும் பலர் பல நாடுகளில் அகதி அந்தஸ்த்து கோரி காத்திருப்பது ஒரு புறமும், சில நாடுகளில் இடைத்தங்கல் முகாமில் புது விடியலைத் தேடிக் கொண்டிருக்கும் அகதிகள் ஒரு புறமும், தமிழ்நாட்டில் இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருகின்ற இலட்சக்கணக்கான அகதிகள் இன்னொரு புறமும் இருக்க…
மற்றும் தன் சொந்த நாட்டிலேயே பல வருடங்களாக தமிழர்களின் சொந்த நிலங்களை ஆக்கிரமித்து அந்த நிலங்களில் இராணுவ முகாம்களை அமைத்தும், பல தமிழர் பிரதேசங்களிலிருந்து தமிழர்களை விரட்டியடித்தும் சிங்களவர்களை குடியேற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு
முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின் அகதிகளாக்கப்பட்ட மூன்று இலட்சம் தமிழ் மக்களில்… இன்னும் ஒன்றரை இலட்சம் மக்கள் சொந்த இடம் மட்டுமன்றி, சொந்த ஊர் கூட இல்லாமல் காடுகளுக்குள் குடியேறி வீடுகள் இல்லாமல் தற்காலிக கூடாரத்திற்குள் விஷ ஐந்துக்களை அணைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
விடுதலைப் புலிகள் இருந்த காலப்பகுதியில் மாதம் சுமாராக இருபது பேரளவு மட்டுமே இரகசிய முகவர்கள் ஊடாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினார்கள். வெளியேற முடியாதவர்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்று முழுச் சுதந்திரத்தோடு வாழ்ந்தார்கள்.
ஆனால், 2009 ஆம் ஆண்டின் பின் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டதாகவும், தமிழர்களை விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பாற்றி சுதந்திரம் வாங்கிக் கொடுத்து விட்டதாகவும், இலங்கை ஒரே நாடு, இங்கு அனைத்து இன மக்களும் நிம்மதியுடனும், சுதந்திரத்திடனும் வாழலாம் என்று சர்வதேசத்திடம் கையேந்தி பல இலட்சம் கோடி டொலர்களை வாங்கி சுருட்டி தன்.இன மக்களுக்கு ஒரு பகுதியையும். தன் குடும்ப உறவுகளுக்கு மீதி பங்கையும் பங்கிட்டுக் கொண்டது மகிந்தாவின் அரசு.
தமிழர்களை வைத்து, தமிழர்களின் மீள்வாழ்விற்காக வாங்கிய உதவிகளில் தமிழர்களுக்கு பெரிதாக எதுவும் செய்யாமல் அவர்களின் இடத்தையும், நிலத்தையும், ஊரையும் பறித்துக் கொண்டு கட்டிய கோவணத்தைக் கூட விட்டு வைக்காமல் கழட்டி எடுத்துக் கொண்டு பெண்களானால் கற்பழித்து கொலை செய்தும், ஆண்களானால் துன்புறுத்தி கொலை செய்தும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்தப் பாகுபாடுமின்றி வஞ்சகமில்லாமல் விதவிதமாக சித்ரவதைகள் மூலம் கொலை செய்து வருவதனால் பயந்து நடுங்கிப் போன தமிழர்கள், விடுதலைப் புலிகள் இருந்த போது கிடைத்த முழுப்பாதுகாப்பும் இப்போது இல்லையே… என ஒரு வழியெதுவும் தெரியாமல், எங்கும் போக முடியாமல் உயிர்ப்பயத்தில் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள், முதியவர்கள் என குடும்பம் குடும்பமாக உயிராபத்தான பயணம் என்று தெரிந்தும், பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்று வரையும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் முக்கியமாக குருடாகிப் போன சர்வதேச குடியேற்ற நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில்…
இலங்கையில் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டதாகவும், இலங்கையில் எந்தவிதமான பிரச்சனைகள் இல்லை எனவும், அங்கு முழுமையான பாதுகாப்போடும், சுதந்திரமாக வாழலாம் என்றும் கூறி… பல நாடுகளில் அகதித் தஞ்சம் கோரியிருந்த தமிழர்களை, மேற்குறிப்பிட்ட தேவாரங்களை திரும்பத் திரும்ப ஓதியோதி வலுக்கட்டாயமாக அந்தந்த நாடுகளால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள்.
நாடுகடத்தப்பட்டவர்களை இலங்கை அரசு சிறையில் அடைத்தும், சிலரை கொழும்பில் உள்ள “இலங்கையின் தமிழர்களின் நரகலோகம்” என பாராட்டுப் பெற்ற நான்காம் மாடியில் கொண்டு போய் சித்ரவதை செய்யப்பட்டு பின்பு காணமல் போன பட்டியலில் இணைக்கப்படுவார்கள். தப்பித்தவறி விடுதலை செய்யப்பட்டாலும் ஒரு சிலரே விடுவிக்கப்படுவார்கள் அவர்களும் மனித உறவுகளோடு சேர்ந்து வாழ முடியாத துரதிஷ்டக்காரர்களாக மாறிவிடுவார்கள்.
அறிவு கெட்ட ஐநா மன்றமும், சர்வதேச குடியேற்ற நாடுகளுமே..!
விடுதலைப் புலிகள் இருந்த காலப் பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே வாழ்ந்து வந்த தமிழர்களுக்கு இலங்கை இனவாத அரசு ஏற்படுத்திய கொடூரங்களால்தான் உயிர்ப்பயத்தில் உயிரைப் பாதுகாக்க வசதி படைத்தவர்கள் குறைந்தளவில் நாட்டை விட்டு அகதிகளாக வெளியேற, வசதியற்றவர்கள் பாதுகாப்புக் கருதி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்று விட்டார்கள்.
ஆனால், 2009 ஆம் ஆண்டின் பின் விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து, விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களைக் காப்பாற்றி விடுதலை வாங்கிக் கொடுத்து விட்டதாக இலங்கை அரசு சொன்ன பிறகுதான்… பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஆண் பெண் வேறுபாடின்றி கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தைகள் வாழ்வின் இறுதிக்கட்டத்தில இருக்கும் வயோதிபர்கள் கூட சில காலமாவது சுதந்திரக்காற்றினை சுவாசித்துச் சாவதற்காக இலங்கையை விட்டு கூட்டம் கூட்டமாக அவுஸ்ரேலியாவிற்கு உயிர் ஆபத்தான கடல் பயணத்தின் ஊடாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தால், ஏன் தமிழர்கள் முன்பை விட அதிகமாக நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என குருடாகிப் போன சர்வதேச குடியேற்ற நாடுகளே… நீங்கள் சிந்திப்பதில்லையா???
சர்வதேசத்திற்கு நீதி நியாயம் பேசுகின்ற வல்லரசுகளும், ஐநா மன்றமும் தங்களின் நீதி நியாயங்களை இந்தியாவின் ஆலோசனைப்படி மகிந்தாவின் கோவணத்திற்குள் புதைத்து விட்டார்கள். அதனால்தான் நாறிப்போனது தமிழர்களுக்கான நீதிகளும், நியாயங்களும்!!!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அகதிகளே..!
தமிழர்களாக உங்களிடம் நாம் ஒன்றைக் கேட்கின்றோம்… வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்ததில் இருந்து இன்று வரையும் சொந்த நாட்டிலேயே வீடு வாசல் இல்லாமல், ஊர்மனைகள் இல்லாமல் நாட்டிற்குள்ளும், உயிர் அச்சுறுத்தலுக்கு உட்பட்டவர்கள் வெளிநாடுகளிலும் அகதிகளாகத்தான் இன்று வரையும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சொந்த நாட்டிலேயே இராணுவத்திலும், காவல்துறையிலும் மற்றும் சில முக்கியமான அரசுப் பணிகளிலும் தமிழர்களுக்கு இடமுமில்லை எந்தவிதமான உரிமைகளும் இல்லை. இவ்வாறு எங்களுக்கு கணக்கிலடங்காப் பிரச்சனைகள் ஏராளம் இருக்கும் போது, உங்களுக்கு இலங்கையில் குடியுரிமையோடு குறைந்த பட்சம் என்ன கிடைக்கும் என்று எதிர் பார்க்கின்றீர்கள்?
தன் சொந்த நாட்டு மக்களையே நிரந்தரமாக ஒரு இடத்தில் குடியேற்றி அவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க துப்பில்லாத இலங்கை அரசு, பொருளாதார ரீதியாக சர்வதேசத்திடம் கையேந்தி வருகின்ற சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மக்களுக்கு குடியுரிமை கொடுக்க முயல்வது நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.
குறிப்பு:-
இலங்கை அரசாங்கமானது, தனது நாட்டில் எந்தவிதமான பிரச்சனைகளும் இல்லை என்பதையும், மக்கள் பாதுகாப்போடும், சுதந்திரமாகவும் குறிப்பாக அமைதியாகவும் வாழ்கின்றார்கள் என்பதை பார்த்துத்தான் குறிப்பிட்ட தேச மக்கள் தமது நாட்டிற்கு வந்து குடியுரிமை கேட்கிறார்கள் என அந்த நாட்டு மக்களை வைத்து நாடகமாடி பொதுநலவாய மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கும் மற்றும் சர்வதேசத்தில் ஈழத்தமிழர்களின் நகர்வுகள், நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவும் குறிப்பட்ட தன் தோழமை நாடுகளிடமிருந்து அகதிகளை நாடகக் கலைஞர்களாக சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கும் அழைத்திருக்கலாம்!
ஆகவே, தமிழர்கள் அனைவரும் விழிப்போடு இருந்து செயல்படுங்கள்.
வல்வை அகலினியன் 
          (27.10.2013)

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, வெளிச்சவீடு இணையம்

0 comments:

Post a Comment