“கந்தலானாலும் கசக்கிக் கட்டு” என்பது எங்களுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது!

“கந்தலானாலும் கசக்கிக் கட்டு” என்பது எங்களுக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது!

இதோ இந்தப் படத்தில் உள்ளதுதான் எனது ஈரத்துடைப்பி (Towel – துவாய்)


இந்தப் படத்தினை இங்கே பதிவிடுவதனால் சிலரின் முகம் சுழிக்கலாம்..! ஆனால், நான் அடைந்த வலிகள்… இந்தக் கிழியலை விட அதிகம்! இன்று வரையும்..!

சிலரது முகச் சுழிப்பிற்காக எனது கிழியல்களை ஒட்டுப் போடவோ, தைத்து மறைக்கவோ முடியாது! காரணம், இங்கே ஒட்டிக் கொள்ள பசையும் இல்லை! தைத்து மறைக்க நூலும் இல்லை!

தற்போது கிழிந்து போய் ஓட்டை விழுந்த என் வலி நிறைந்த வாழ்க்கைக்கு ஓரே ஆறுதல் இந்த முகநூல்தான். இந்த முகநூல்தான் எனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியும்… என் மனக்காயங்களுக்கு மருந்தாக பல உறவுகளை பிரசவித்தும் தந்துள்ளது.

அதனால்தான், இங்கிருந்து ஒரு வழிகளும் தெரியாமல் என் வலிகளையும் இந்த முகநூல் என்னும் என் துணைவனிடம் அள்ளிக் கொண்டு வந்து கொட்டி விடுகிறேன்!

இந்த ஈரத்துடைப்பி (துவாய்) படத்தினை இங்கே பதிவிடுவதனால் எனக்கு என்ன வெட்கம் வேண்டிக் கிடக்கிறது? இதைப் பதிவிடுவதால்தான் என் துக்கங்கள் அனைத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறதே எனக்கு..!!

தமிழ்நாட்டில் பல சிறைகளில் வாழ்ந்த எனக்கு அந்த சிறைவாழ்வின் அவலவலிகளை நன்கறிவேன்.

சிறைகளில் கூட அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், சுகாதார வசதிகள், மாற்றுடை வசதிகள், உறவுகள் வந்து பார்க்கக் கூடிய வசதிகள் மற்றும் தபால் வழித் தொடர்புகள், வாசிப்பு, கல்வி, வேலை எனச் சில வசதிகள் உண்டு…

நாம் பாவித்து வருகிற குளியலறை மற்றும் கழிவறை
ஆனால், நாம் வாழுகின்ற இந்தத் துறைமுகச் சிறையிலேயே எதுவுமே இல்லை!

இறக்கப்பட்ட அதே துறைமுகத்தினில் கப்பல்களில் கொண்டு வந்து இறக்கப்படும் அலுமினியத் தூள்கள் பறந்து வந்து எம்மை அணைத்து எம்மை மினுங்கச் செய்யும்! சுவாசத்திற்குள் சென்று பல வியாதிகளை உருவாக்கி மெல்லக் கொல்லும்!

பல நாட்களாக கப்பல்களில் இருந்து அலுமினியம், எண்ணெய் போன்றவைகளை இறக்குவதற்காக இயக்கப்படும் இயந்திரத்தின் சத்தம், நாம் தங்கியிருக்கின்ற மர வீட்டினை கையடக்கப் பேசியின் அதிர்வு மாதிரி (Vibration) அதிர வைக்கும். அந்த அதிர்வானது எமது தூக்கங்களைக் கலைத்து துக்கங்களை எம் மனதிற்குள் நிரப்பிக் கொள்ளும்! புதிய தேசம், புதிய காலநிலை ஆகியவைகளால் எம் உடலில் பல மாற்றங்களை உருவாக்கி வியாதிகளை கொண்டு வந்து உளவியலையும் தாக்கும்!!

நாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறையும், அலுமினியக் குதங்களும்
சித்தப்பிரமை பிடித்து முற்றிப் போன நோயுடன் ஒன்றரை வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்தே வெறுத்தே போய் விட்டது! முகச்சவரம் செய்யாத காடாகிய ஆண்களின் முகத்தினையும்… பொட்டில்லாத நிலவு தொலைத்த பெண்களின் முகத்தினையும் ஒரு குறிப்பிட்ட அறைக்குள் பார்த்துப் பார்த்தே சலித்தே போய் விட்டது!

தற்போதைக்கு இங்குள்ள அனைவருக்கும் ஓரே ஆறுதல் இங்கிருக்கும் ஐந்து வயதுக் குழந்தை தரணிகாதான்..! காரணம், அந்தக் குழந்தை மட்டும்தான் உடலினில் பல நோய்கள் இருந்தாலும்… எந்தவிதமான கவலைகளைகளையும் அறியாமல் சிரித்தபடி ஓடியாடி விளையாடுகின்ற ஒரு அழகுத் தேவதை!

நாம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வாசலில் தரணிகாவுடன்
இருந்தாலும், மூன்றரை வயதில் வந்த தரணிகாவிற்கு இப்போது ஐந்து வயதாகிறது. நான்கு வயதில் போட்டுக் கொள்ள வேண்டிய தடுப்பூசியில் இருந்து போலியோ சொட்டு மருந்து அத்தியாவசிய மருந்துகளான காய்ச்சல் மற்றும் ஜலதோச வலி நிவாரணிகள் எதுவுமே இல்லாமல் மிகவும் வலிகளுடன் குற்றமேதும் செய்யாமல் ஈழத்தமிழனாகப் பிறந்த ஒரே குற்றத்திற்காக அடிப்படை வசதிகளும், சுகாதார வசதிகளும் இல்லாத சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்.!!

தரணிகாவின் சிறுநீரில் கிருமி இருப்பதை அறிந்தும் இதுவரை சிகிச்சை செய்ய யாருமே முன் வந்ததில்லை! இன்று வரையும் ஒரு நாளைக்கு குறைந்தது பத்து தடவையாவது அவரை அறியாமலே சிறுநீர் வெளியேறி விடும். வெளியேறுகின்ற போது எரிச்சலுடன் வலி உருவாகி அழத் துவங்கி விடுவார். உடனே எம்மை காவலில் வைத்துள்ள காவல் துறையினரிடம் பல தடவை கெஞ்சி அழுததில் எங்கள் மொழிகள் அரபியர்களுகளுக்கு இதுவரை புரிந்ததேயில்லை! எமக்கு அழுகைதான் மிச்சம்! அழுகை கற்றுத் தந்தது சில அரபிய வார்த்தைகள் மட்டுமே..! அதாவது “மாஃபி”, “கலாஸ்”, “றூ” என்ற வார்த்தைகள்தான் எமக்கு அதிகமாகத் தெரியும். தரணிகாவிற்கு கூடத் தெரியும்!

நம்மைச் சுற்றியுள்ள காவல்துறை
மாஃபி, கலாஸ், றூ என்றால் தமிழில் வரிசையின் படி “இல்லை”, “முடிந்தது”, “போ” என்று அர்த்தம். இந்த வார்த்தைகளில் என்ன இருக்கின்றது என நீங்கள் வினாவலாம்?

நாம் அடிக்கடி எங்கள் வலிகளைச் சொல்லி அரபியர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்ற போதெல்லாம். அவர்கள் கை அசைவுகளூடாக எம்மிடம் அடிக்கடி அழுத்தமாகச் சொல்கின்ற வார்த்தைகள்தான் இவை! அதாவது, எப்போதும் அவர்களிடமிருந்து எதுவுமே கிடைப்பதில்லை என்பதனால் அந்த வார்த்தைகளுக்கு “இல்லை”, “முடிந்தது”, “போ” என்பதாக இருக்கும் என நாமாகவே ஊகித்து உணர்ந்து கொண்டோம்!

ஈழத்தமிழனாகப் பிறந்த குற்றத்திற்காக நம்முடன் கொண்டு வந்த மக்கிப் போன உடையுடனேயே வாழ்வினை நகர்த்தி எமக்கான புதிய விடியலைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.

இன்று வரையும் விடியல் கிடைத்தபாடுமில்லை!! எமக்கு சொந்தமான நோய்கள் குறைந்தபாடுமில்லை!!

ஒன்றரை வருடங்களாக என் உடலின் ஈரத்தினை நீக்கி நீக்கியே கிழிந்து போய் விட்டது இந்த ஈரத்துடைப்பி (துவாய்)!

அதுபோலவே… வலியினைச் சுமந்து விடுதலையையே நினைத்து ஏங்கி ஏங்கியே கிழிந்து போய் விட்டது என் மனது!!

– வல்வை அகலினியன்
                (08.03.2014)

எம்மைப் பற்றி வந்த ஒரு ஆங்கிலக் கட்டுரை:

துபாயில் வதைக்கப்படும் ஈழ அகதிகள்....

UN washing its hands of destitute Sri Lankan Tamil refugees in Dubai

0 comments:

Post a Comment