உங்களின் கைகளில் தட்டுப்படும்... எங்களின் தொப்புள் கொடி.!!

உங்களின் கைகளில் தட்டுப்படும்...
எங்களின் தொப்புள் கொடி.!!



ஊரும் தாக்கியது..!
உலகும் தாக்கியது..!
தொப்புள் கொடி - அன்று
அறுந்தே போனதனால்..!

சிங்களவன்... ஈழத்தை 
பட்டாசை வெடித்துக் 
கொண்டாடும் போது...
நீங்கள் புத்தாடை அணிந்து
தொலைக்காட்சிகளில்
நடிகையின் தொப்புளின் 
ஆழத்தினை அளந்ததனாலேயே....

எங்களின் தொப்புள் கொடியும் 
கத்தரிக்கப்பட்டது.!!
எங்களின் குரல் வளையும்
நசுக்கப்பட்டது.!!

தொங்கிப் பிடிக்க இடமேதுமின்றி...
தாங்கி, ஆறிட மடியேதுமின்றி...
ஏங்கித் தவித்தபடி அலைந்த போதும்...

"யாருமே இல்லையா..?" என்று
கதறித் துடித்த போதும்...
நம்பிக்கையோடு இருந்த கடவுளும்
செத்தே போய் விட்டான்.!!

கூட வந்த உறவுகளும்
உயிரிழந்து போக...
கையோடு வந்த குழந்தைளும்
சில உறுப்பக்களை...
இழந்தே போயினர்.!!

பொங்கி வந்த அரக்கர்களின்
பொதிக்குள் புதையுண்டு
உயிரிழந்த எம் உறவுகளின்

கண்ணெதிரே சிதைந்த உறுப்புக்களை
பொறுக்கி அள்ளி எடுத்து...
அவசரத்தில் கூட 
புதைக்க முடியாத அளவிற்கு
சீறி வந்த எறிகணைகளின் அவசரம்
புதைப்பவர்களின்...
நெஞ்சத்திலும் புதைந்தது.!!



பிஞ்சுக் குழந்தைகளைக் காக்க
கர்ப்பிணி தாயானவள்...
அந்தக் குழந்தைகளை 
மார்போடு அணைத்து குனிந்து படுக்க
கருப்பயைக் கிழித்துக் கொண்டு
குண்டோடு வந்து விழுந்தது...
உயிர் விட்ட கருக் குழந்தை.!!

பல வகையான குண்டு மழைக்குள்
அகப்பட்ட குழந்தைகளானவர்கள்
ஒளிந்து கொள்ள இடமேதுமின்றி
பதுங்குக் குழியிலும் புதைந்தனர்..!
கருப் பைக்குள்ளும் கருகிப் போயினர்.!!
இக் குழந்தைகள் செய்த 
பாவம்தான் என்ன.??
ஈழத்தில் பிறந்தததுவோ.??

எம் முற்றங்களில்...
அழகுத் தோட்டங்களாக
பூத்துக் குலுங்கிய
ரோஜாப் பூக்களும்...

இதழ்கள் பிடுங்கப்பட்டு
கசக்கிப் பிழிந்து எறியப்பட்டனர்.!!
மண்டை ஓடுகளில்
கூழ் குடிக்கும் காமப் பிசாசுகளோ...
இதழ்கள் பிடுங்கப்பட்ட
அழகு ரோஜாப் பூக்களின்
உயிர் போன உடலிலும்
உல்லாசத்தை அனுபவித்தனர்.!!




அழுக்குத் தாய்க்குப் பிறந்த
இழுக்குப் பிடித்த மிருகக் கூட்டமானது
தம் சோதரிகள் குளிப்பதையே
ஒளிந்திருந்து பார்த்து
சுய இன்பம் அனுபவித்த...
காமவெறியில் திளைத்துப் போய்...
உயிரற்ற உடலிலும்
உல்லாசத்தை கண்டனர்....
இறந்து போன தம் உணர்வுகளால்.!!

இவைகள் காட்சிகளாக்கப்பட்டு
தொலைக்காட்சிகளில் 
பல் இளிக்கும் போது...
சில உணர்வற்ற ஜென்மங்கள்...
உணர்வுகளேயின்றி...
நரம்பறுந்த நாக்குகளால்...
ஈர உணர்வுகளுமின்றி
ஒரு துளி மனச்சாட்சியுமின்றி...




"இவ்வாறான படங்களை
பதிவு செய்யாதே" என்றனர்...
நடிகைகளின் நிர்வாண
உடல்களை மறைந்திருந்து இரசித்தபடி.!!

உலக வல்லரச பேய்களும்...
இப்படியான கோலங்களில்
ஈழத்தமிழனைப் பார்த்த பின்பும்
ஈவிரக்கமே இன்றி - தம்
குருட்டுக் கண்களை மூடிக் கொண்டு
தமது ஊனமுற்ற கைகளினால்...
கறைபடிந்த கைகளை
பற்றிப் பிடித்து
கை குலுக்கிச் சென்றது.!!

இறையாண்மை இறந்து போன
இந்தியாவும்... சோனியாவின்
முந்தானைக்குள் முடங்கிப் போனது!
இந்தியாவின் உளுத்துப் போன சட்டமும்
கேடுகெட்ட அரசியலும் - இந்தியாவின்
இறையாண்மையை இலங்கைக்காக
அடகு வைத்துக் கொண்டது!




தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ
தமது கேவலங் கெட்ட 
அரசியல் சுக போகத்திற்காக..
உளவுத்துறையின் விபச்சாரத்தில்
விழுந்து போயினர்..!
ஓரிருவர் எழுந்தாலும்...
உரக்கக் கேட்கவில்லை குரல்.!!
காரணம், ஊடகமும்...
உளுத்துப் போன உளவுத்துறையோடு
விபச்சாரம் செய்து கொண்டிருந்தது.!!

நாதியற்றுப் போன ஈழத்தமிழன்
தனது வலிகளையெல்லாம்
ஆரம்ப வரலாறுகளோடு
பதிவிட்டு பார் பார்க்கச் செய்தால்...
அவனது வரலாறுகளையே 
படித்து விட்டு... - ஒரு சிலர்
திரைப்படக் கதைகளில் வரும்
அம்புலிமாமா கதையோடு கலந்து
அவனுக்கு துரோகிப் பட்டம் கொடுத்து
பாதாளத்தில் தள்ளி வீழ்த்துகிறார்கள்.!!

இன்னும் சிலரோ...
தெருத்தெருவாக மேடை போட்டு
"வவுனியா முள்வேலிக்குள்" இருக்கும்
எம் தொப்புள் கொடி உறவுகளை
"விடுதலை செய்.!!" "விடுதலை செய்.!!" 
என தொண்டை கிழிய கத்துவார்கள்...
தமது காலடியில் 
விடுதலை செய்யச் சொல்லிக் 
கெஞ்சிக கதறும் "சிறப்பு முகாம்" 
அகதிகளை மறந்து போன படி..!

ஒன்றரை இலட்சம் உறவுகள்
மாண்ட பின்னும்...
தமிழ்நாட்டில் ஏழரைக் கோடி
தமிழ் உறவுகள் இருந்தும்...

ஒன்றே கால் கோடி 
சிங்களவன் மிரட்டுவதும்...
உலகம் ஏதுவுமே கண்டு கொள்ளாதபடி
இருப்பதும்... ஏன் தெரியுமா??




தொப்புள் கொடி அறுந்ததனால்.!!

இல்லையென்று சொல்லி,
உன்னையே... நீ ஏமாற்றாதே..!
அரசியல் ஆச பாசங்களையும்...
உனக்குள் இருக்கும் சாதீய வெறிகளையும்
உன்னைப் பிடித்து ஆட்டும் மதத்தினையும்
தூக்கி... தூர வீசி எறிந்து விட்டு...

மறத் தமிழனாக...
முள்ளிவாய்க்கால் மண்ணை நினைத்து
உன் நெஞ்சத்தில் கை வைத்து
உன் தொப்புளைத் தொட்டுப் பார்.!!
தட்டுப்படும்... எம் தொப்புள் கொடி.!!

           (16.05.2015)

0 comments:

Post a Comment