“தொலைந்தது” பாடல் காணொளி


“தொலைந்தது” பாடல் காணொளி


உண்மையிலேயே அதிகமானவற்றை தொலைத்துத்தான் பல வலிகளுடன் இப்பாடல் காணொளியை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு திரைப்படத்திற்கு.. ஒரு குறும்படத்திற்கு விமர்சனம் எழுதலாம், பல பாடல்கள் கோப்புக்கும் விமர்சனம் எழுதலாம். ஆனால், தனியொரு பாடலுக்கு விமர்சனம் எழுதுவது தேவையா என பலர் நினைத்துக் கொள்ளலாம்.

உண்மையிலேயே இந்தப் பாடல் உருவாகிய நிலையினை கருத்தில் கொண்டால் நிச்சயமாக விமர்சனம் தேவைதான் என அனைவரும் நினைப்பார்கள். காரணம், இந்தப் பாடல் உருவான தேசம், சூழல், வலிகள் என்பவற்றைச் சேர்த்து இந்தப் பாடலை உருவாக்கியவர்கள்.

இந்தப் பாடலுக்காக தொலைத்தது அதிகம். இக்காரணங்களை கவனத்தில் கொண்டு இந்த ஈழத்துக் கலைஞர்களை ஊக்குவித்து வளப்படுத்தி கௌரவிக்கவே இந்தப் பாடலுக்கான விமர்சனத்தை எழுத ஆரம்பித்தேன்.


இதே பாடலை தமிழ்நாட்டில் உருவாக்கியிருந்தால் இதற்கு விமர்சனங்களும், முக்கியத்துவமும் இருந்திருக்காது. காரணம், தமிழ்நாட்டில் காலங்காலமாக இசையும், கலைகளும் தமிழர்களோடு ஒன்றாகக் கலந்து சேர்ந்தே பயணித்து வருகின்றது. அதனால் அவர்களால் இலகுவாக நினைத்தவுடன் உருவாக்கிவிட முடியும்.

சம்மந்தமே இல்லாத களச்சூழலில் வாழ்ந்த ஒரு இளைய சமுதாயம் தாம் பார்த்து வந்த காட்சிகளையும், தாம் உள்வாங்கிய எண்ணங்களையும் அனுபவங்களாக்கி தமிழ்நாட்டுத் திரைப்படங்களுக்கு ஈடாக ஒரு பாடல் காட்சியினை உருவாக்கியிருப்பது… அவர்களின் எதிர்காலத் தேடல்களையும், “ஈழத்திரைப்படத்துறை” என்ற ஒரு புதிய சமூகத்தை உருவாக்கவும் வழி கோலியுள்ளது.


கடந்த முப்பது வருடங்களுக்கு மேல் போராட்டங்களே வாழ்க்கையாகிப் போய் இறுதியில் உறவுகளையும், வாழ்விடங்களையும் மற்றும் முகவரிகளையும் தொலைத்து வலிகளோடு வாழ்ந்த ஈழத்தமிழர்களில் இருந்து இவர்களைப் போன்ற இளைய சமுதாயத்தில் அத்திப் பூத்தாப் போல் இசையூடாக காதலும் அழகாக காணொளி வடிவில் பூத்திருக்கின்றது.

தொலைந்து போன சில உறவுகள் ஒன்று சேர்ந்து “தொலைந்தது” என்ற இப்பாடல் காணொளியூடாக தொலைந்து போன முகவரிகளையும், அடையாளங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.

காதலில் உருவாகும் சில முக்கிய வலிகளை பிரதிபலிக்கும் இப்பாடலானது.. ஒரு ஆணின் காதலை தன் சந்தர்ப்பத்திற்கேற்றால் போல் பயன்படுத்தி தனது தேவைகளை நிறைவேற்றிய பின்னர் புனிதமான காதலை தூக்கியெறிந்து சிறகுகளையும் பறித்துச் சென்ற காதலியின் காதலை நினைத்துப் பாடி இன்றைய காதலர்களுக்கு ஒரு விழிப்புணர்வை உண்டாக்குகிறார் இக் காதலன்.


கடந்த மூன்று வருடங்களாக மெட்டமைத்து வெளியிட முடியாமல் அடைந்த வலிகள் ஏராளம். ஒரேயொரு பாடல்தான் என சாதாரண காட்சிகளாக உருவாக்கி உடனடியாக வெளியிடுவதென்றால்… எப்போதோ வெளியிட்டிருக்க முடியும். முதல் பாடலாக இருந்தாலும் துல்லியமான ஒலி ஒளி அமைப்புக்களுடன் சிறந்த படைப்பாக வழங்க வேண்டும் என்பதற்காக காத்திருந்து அதற்கான வழிகள் கைகூடியதும் பல வலிகளோடு பிரசவித்திருக்கிறார்கள்.

இசையால் சாதிக்கத் துடிக்கின்ற இளம் இசையமைப்பாளரான “தீசன் வேலா” தனது தனிப்பட்ட முயற்சியால் எந்தவொரு பின்புலமும் இன்றி பல இடையூறுகளுக்கு மத்தியிலும், சில எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் இந்தப் படைப்பினை ஒரு கனவாக சுமந்து வந்து அழகாக நினைவுகளாக்கி உள்ளார். அதற்கு பக்கபலமாக பல இளம் படைப்பாளிகளும் கை கோர்த்து அனைவரினது முயற்சிகளும் சேர்ந்து ஒரு தரமான படைப்பாக இதை உருவாக்கியிருக்கிறார்கள்.


சன் டிஜிட்டல்” மற்றும் “DDS Universal”இன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் “தொலைந்தது” என்ற இப் பாடல் காணொளியினை இசையமைத்துப் பாடியுள்ளார் “தீசன் வேலா”. உரையிசைப் பாடகர் உரையிசை வரிகள் தனுசியன், பாடல் வரிகள் கவி அஜய் மற்றும் அஞ்சலி தீசன்.

கருவில் சுமந்த அழகிய மொட்டு மலராமல் போன வலியுடன்… நினைவில் சுமந்த எண்ணங்களை கருவாக்கி மலர வைத்திருக்கும் “அஞ்சலி தீசனின்” வரிகள் அழகாக இங்கே உயிர் பெற்றிருப்பது அதி கூடிய சிறப்பாகும்.

இப்பாடல் காணொளியின் நாயகன் தீசன் வேலா இப்பாடல் உருவான விதம் பற்றி கூறியதாவது: “பெண்களால் ஏமாற்றப்பட்டவர்கள் தற்கொலை, வாழ்வினில் விரக்தி போன்றவை பற்றி எதுவுமே யோசிக்காமல் இருப்பதற்காகவும், அது ஒரு நரக வாழ்க்கை அது இல்லாமல் என்னால் வாழ முடியும் எதற்காக சாக வேண்டும் என்றும் ஒரு தவறான முயற்சிக்குப் போகக் கூடாது என்பதற்காகவும் இப்பாடல் ஊடாக இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு விழிப்புணர்வை உருவாக்கியிருக்கிறேன்.


இப்பாடல் காணொளி வடிவில் வெளிவருவதற்கு பலர் பல வழிகளில், பல விதங்களில் உதவியிருந்தாலும் அவர்களுக்கு நன்றி சொல்லும் இவ்வேளையில், என்னை உருவாக்கிய எனது அம்மாவிற்கும், எனது அப்பாவிற்கு நிகராக என் இசைக் கற்றலுக்கு என்றும் ஆதரவு தந்து கொண்டிருக்கும் எனது அக்காவிற்கும் மற்றும் என் முழுமையான படைப்பிற்கு முழு ஆதரவு தந்து எனக்குள்ளே எப்போதும் இருக்கின்ற என் மனைவி அஞ்சலிக்கும் இச் சந்தர்ப்பத்தில் என் இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என தீசன் வேலா தெரிவித்தார்.

மொத்தத்தில் “தொலைந்தது” என்ற இப் பாடல் காணொளியூடாக ஈழத்துக்கலைஞர்கள் பற்றிய என் கவலைகளும் கலைந்தது..

 வல்வை அகலினியன்
               (09.03.2014)


இந்தப் பதிவின் இணைய வடிவம்:
1, வவுனியா நெற் இணையம்
2, www.stsstudio.com

0 comments:

Post a Comment