‘வப்பு’ – களம் படக்குழுவினரின் மற்றுமொரு உன்னத படைப்பு.

‘வப்பு’ – களம் படக்குழுவினரின் மற்றுமொரு உன்னத படைப்பு.



ஈழத்தவர்கள் எதிலும் சளைத்தவர்களல்ல என்பதை… மறுபடியும் “வப்பு” எனும் குறும்படம் ஊடாக நிரூபித்துள்ளனர் ஈழத் திரைப்படக் கலைஞர்கள்.ஏற்கனவே “களம்” என்ற ஈழப்போராட்டம் சம்மந்தப்பட்ட ஒரு உணர்ச்சிக காவியத்தை ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பினை மிகவும் திறம்படச் செய்த விஜிதன் சொக்கா அவர்கள்… கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு படத்தொகுப்பு மற்றும் கணிணி வரைகலை போன்ற பணிகளை ஏற்று செதுக்கிய படமே “வப்பு” என்ற ஒரு விழிப்புணர்வுப் படமாகும்.
இப்படமானது பிரான்ஸ் தேசத்தில் சமீபத்தில் நடந்த நாவலர் குறும்படப் போட்டியில் 5 விருதுகளைத் தட்டிச் சென்று அமோக வரவேற்பையும், பெருத்த எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தியிருக்கின்ற படமாகும்.

இங்கே, இப்படம் பற்றி அதிகம் விபரிக்க வேண்டிய அவசியம் என்னவெனில்….

இப்படத்தினை உருவாக்கிய ஈழக்கலைஞர்களானவர்கள் ஈழ தேசத்தில் நடந்தேறிய கடும் யுத்தங்களுக்குள் அகப்பட்டு அனைத்தையும் இழந்து அகதிகளாக புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருபவர்களாவார்கள். தாம் அனுபவித்த வலிகளுக்கப்பால்… ஒரு துறையைத் தெரிவு செய்து எந்தவிதமான முன் அனுபவங்களுமின்றி திரைத்துறையிலும் கால் பதித்து சாதிப்பது என்பது மிகவும் எளிதான காரியம் அல்ல. ஆனாலும், தமக்குள் கூடப்பிறந்த போராடும் குணங்களால்… திரைப்படத்துறையிலும் சாதித்துக் காட்டியுள்ளார்கள்.


வப்பு படத்தின் படத் தலைப்பிலிருந்து ஆரம்பக் காட்சிகள் ஆரம்பிக்கும் போது… குறும்படம் என்பதை மறந்து ஒரு திரைப்படம் பார்ப்பது போன்ற ஒரு உணர்வையே ஏற்படுத்துகின்றது. காரணம், காட்சி வடிவமைப்புக்களும்… ஒளிப்பதிவு, இசை போன்ற பின்புலங்களால் ஒரு பிம்பத்தை உருவாக்கியிருக்கின்றது.

பிரான்ஸ் தேசத்தில் லாச்சப்பள் (La Chapelle) எனும் நகரில் 2004 ஆம் ஆண்டு என்ற சிறிய தலைப்போடு ஆரம்பிக்கும் படமானது… குழுக்களுக்கிடையே மோதலினால் ஏற்படுகின்ற வலி நிறைந்த வாழ்வினையே சொல்லி நிற்கிறது.

ஆரம்பக் காட்சியில் நாயகன் அறிமுகமாகும் போது ஒளிப்பதிவிலும்… இசையிலும்… விஜிதனும், ஜனார்த்திக்கும் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபித்துள்ளனர். நாயகன் ரமணன் மட்டும் சும்மாவா..? தனது பங்கிற்கு தனது நடிகர் பட்டாளத்துடன் அசத்திக் காட்டியுள்ளார்.


ஒரு பகல் வேளையில் லாச்சப்பள் நகர அழகிய தெருவில் ஒரு தேவதை தாயாரோடு உலா வருகிறாள். அதை நாயகன் வைத்த கண் எடுக்காமல் உற்றுப் பார்த்தபடியே காதல் உணர்வுகளோடு நாயகியின் பின்னால் தொடருகிறான். அவ்வேளையிலே… பாஸ்கி என்ற ஒரு இளைஞன் அந்த நாயகியை முன்னால் பார்த்தபடி கடந்து செல்கையில்… நாயகியின் பின்னால் தொடர்ந்து வந்த நாயகன் ரமணனுடன் எதிர்பாராத விதமாக மோதவே… தனது நாயகியை ஏன் பார்த்தாய்? என்று பாஸ்கியின் சட்டையைப் பிடித்து மிரட்டி தனது நண்பர்களுடன் வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்று ஒரு இடத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்கிறான் நாயகன்.

காரில் அழைத்துச் செல்கின்ற இடங்களிலெல்லாம் பின்னணி இசையில் ஒரு விறுவிறுப்பை அதிகரிக்கச் செய்து மிரட்டியிருக்கிறார் ஜனார்த்திக்.

போதையில் மூழ்கிய நாயகனுக்கு போதை தலைக்கேற… தன் நண்பர்களோடு பாஸ்கியை மேலும் துன்புறுத்துகிறான். இந்த இடங்களில் பாஸ்கியின் முகபாவனையானது படம் பார்க்கின்ற அனைவருக்கும் ஒரு பரிதாபத்தை ஏற்படுத்தி நாயகன் மேல் கடும் கோபத்தை வர வைக்கிறது.


போதை உச்சத்திலிருக்கும் நாயகனானவன்….

“இன்டைக்கு உன்னப் போடப் போறோம்” என்று பாஸ்கியைப் பார்த்து சொல்லவும்…

“போடுவீங்கள்… போடுவீங்கள்…. இதென்ன ஊரென்று நினைச்சுப் போட்டிங்களோ…

பிரான்சில் இருக்கிறம் என்று நினைச்சுக் கொண்டு பார்க்கனும்… இது பிரான்ஸ்…

பொலிஸுக்குத் தெரிஞ்சால்… என்னாகும் தெரியும்தானே…?

விசரங்கள்” என்று பாஸ்கி வேதனையில் கூறும் போது…

அவனது முகபாவனையானது ஏக்கத்துடனேயே இருக்கின்றது, அவனது பரிதாப முடிவு தெரியாமலேயே….

பாஸ்கியின் வார்த்தைகளினால் கோபமான நாயகன் போதை தலைக்கேறிய நிலையில் எழுந்து வந்து கையில் இருந்த வெற்று மதுபான போத்தலால் பாஸ்கியின் தலையில் ஓங்கி அடிக்க… பாஸ்கியின் தலை பிளந்து அந்த இடத்திலேயே உயிரிழக்கிறான்.


என்ன செய்வதென்று தெரியாத நாயகன் தனது கூட்டத்துடன் சேர்ந்து பாஸ்கியின் உடலை காரில் ஏற்றிச் சென்று தெருவில் வீசி விடுகிறான். வீசுவதை தொலைபேசிக் கூண்டுக்குள் இருந்து கவனித்த பாஸ்கியின் நண்பன் ரகு ஊரில் இருக்கும் பாஸ்கியின் குடும்பத்திற்கு தெரியப்படுத்த தொலைபேசியில் தொடர்பு கொள்கிறான்…

அப்போது ஊரைக் காட்டுகிறார்கள். ஒரு அழகிய கிராமம் வீதியோரமுள்ள இரண்டு பக்கத்திலும் தண்ணீர் நிரம்பிய வயல் வெளிகளைக் காட்சிகளாகக் காட்டும் போதும்… பறவைகள் மற்றும் நாய்கள் போன்றவைகளின் சத்தங்களை மிகவும் துல்லியமாக காட்டும் போதும் விஜிதன் சொக்காவின் ஒளிப்பதிவானது கவிதையாகிறது. அவ்வளவு அழகு! உண்மையிலேயே ஈழம் போன்றே காட்சி தரும் அந்த ஊரானது தமிழ்நாட்டிலுள்ள பட்டுக்கோட்டையாகும்.

ஈழம் சார்ந்த படக்காட்சிகளை எடுப்பவர்களுக்கு பட்டுக்கோட்டை ஒரு சிறந்த இடம் என்பதை விஜிதன் சொக்கா தனது கவிதைப் பார்வையால்… அழகாகவே பதிவு செய்துள்ளார்.


ஊரில் தொடர்பில் வந்த பாஸ்கியின் தம்பி ராஜு… அண்ணனின் அழைப்பு என ஏங்கி…

“ஹலோ, அண்ணா எப்படி இருக்கீங்க” என்று கேட்க…

“ஹலோ, ராஜூ நான் அண்ணா இலல, ரகு மாமா எனக் கூறி அண்ணனின் இறப்புச் செய்தியைத் தெரிவிக்கிறார்.

அத் துயரச் செய்தியைக் கேட்டு அழுதபடி ஓடுகின்ற சிறுவனானவன்…

பத்து வருடங்கள் கழித்து பிரான்ஸ் சென்று நாயகனான ரமணனை பழி வாங்கத் தேடி அலைகிறான்….

இதுவரை வெளிவந்த ஈழப்படங்கள் அனைத்தையும் விட, இப்படத்தில் நாயகனின் மனைவியாக வருபவரின் பேச்சு வழக்கு இழுவை இல்லாமல் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது.


பத்து வருட வாழ்வில் நாயகனின் வாழ்வில் பல மாற்றங்கள். மனைவி, குழந்தை எனத் தொடர்ந்த நாயகன் காணமல் போக… திடீரென்று தகவல் அறிந்த மனைவியும் தேடி வர… நாயகனைப் பழி வாங்க வந்த பாஸ்கியின் தம்பி ராஜுவும் தேடி வர…. இருவரும் ஓரிடத்தில் வந்து நின்றபடி நாயகனைப் பார்க்கிறார்கள்.

தந்தையைப் பார்த்த குழந்தை… ஓடிச்சென்று தந்தையினருகில் அமரவும், தனது குழந்தைதான் என்று உணராத அளவிற்கு போதைப் பழக்கத்தால் பைத்தியமாகி குழந்தையை விரட்டுகின்ற காட்சியினைக் கண்டு மனைவியானவள் கதறவும்… பழி வாங்க வந்த ராஜூவும் தனது பழி வாங்கும் எண்ணத்தைக் கை விடுகிறான். அந்த உச்சக் காட்சிகளில் நாயகனான ரமணன் எழுந்து தள்ளாடியபடி நடந்து செல்லவும் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி படம் முடிவடைகிறது.

உண்மையிலேயே… இது ஒரு குறும்படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகவும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளது. ஜனார்த்திக்கின் பின்னணி இசை படத்திற்கு பெரும் பலம். காட்சிகளுக்கேற்ற வகையில் இசையை மிகவும் அழகாகவே கோர்த்திருக்கின்றார்.


விஜிதன் சொக்கா… இவரைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை! இவரின் முந்தைய ஒளிப்பதிவு செய்த படமான “களம்” குறும்படம் ஊடாக என்னை மிகவும் கவர்ந்தவர். இவரோடு களம் குறும்பட இயக்குனரும், வப்பு படத்தின் நாயகனுமான தம்பி ரமணனும்… களம் மற்றும் வப்பு ஆகிய இரு படத்திற்கும் இசையினைக் கோர்த்து படத்தினை அழகாக்கிய ஜனார்த்திக் சின்னராசா ஆகியோரும் என்னை மிகவும் கவர்ந்தவர்களே..!

படத்தில் நடிக்காது விட்டாலும்… வப்பு படத்தின் நிஜ நாயகன் விஜிதன் சொக்கா என்று சொன்னால் அது மிகையாகாது! காரணம், தென்னிந்திய திரைப்படத் துறையில் தனது கூர்மையான ஒளிப்பதிவு ஊடாக சரித்திரத்தில் இடம் பிடித்த P.C ஸ்ரீராம் போன்று செயற்கைத் தனமில்லாத இயற்கை வெளிச்சத்தில் மிகவும் துல்லியமாக ஒளிப்பதிவு செய்து படத்தினை அழகிய கவிதையாக்கியுள்ளார்.

இதுவரையிலும் வெளிவந்த அனைத்து ஈழப்படங்களின் ஒளிப்பதிவுகளை விடவும்… இயற்கை வெளிச்சத்தோடு மிகவும் துல்லியமாக ஒளிப்பதிவு செய்து ஒவ்வொரு காட்சிகளையும் கவிதையாக்கியிருக்கும் அழகினில் விஜிதன் சொக்காவின் ஒளிப்பதிவே மிகவம் சிறந்தது! இவரை ஒரு ஈழத்து P.C ஸ்ரீராம் என்றே அழைக்கலாம்… இருந்தும், அடுத்தவரோடு ஒப்பிடுவது அழகில்லை என்பதால்…


இப்படத்திற்காக ஐந்து விருதுகளையும் பெற்றிருப்பதால்… விஜிதன் சொக்காவை “ஒளிக்கோன் விஜிதன் சொக்கா” என்று அழைப்பதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.

“வப்பு” அனைத்து ஈழத்து திரைப்படக் கலைஞர்களும் பார்க்க வேண்டிய ஒரு “கலைப் பெட்டகம்”!

– வல்வை அகலினியன்
                (02.02.2015)



“வப்பு” பெற்ற விருதுகள் விபரம்
—————————————————
சிறந்த நடிகர் : ரமணன்
சிறந்த துணை நடிகர் : பாஸ்கி
சிறந்த படத்தொகுப்பு : விஜிதன் சொக்கா
சிறந்த ஒளிபதிவு : விஜிதன் சொக்கா
சிறந்த இயக்குனர் : விஜிதன் சொக்கா

BEST actor : I.Ramanan
BEST support actor : m.basky
BEST art direction : Vigithan sokka
BEST camera : Vigithan sokka
BEST DIRECTOR : Vigithan sokka

இந்தப் பதிவின் இணைய வடிவம்:

1, சங்கதி இணையம்
2, வெளிச்சவீடு இணையம்
3, www.stsstudio.com
4, www.tamil24news.com
5, www.lankaone.com

0 comments:

Post a Comment